Friday, 8 February 2013

அந்த ஐந்து நிமிடங்கள்


அந்த ஐந்து நிமிடங்கள் 



தூக்கு கைதி ஒருவனின் 
துக்க கதை இது 

நாளை தான் உனக்கு 
நாள் குறித்து இருக்கு, 
என்ன இறுதி ஆசை 
என்று அதிகாரி கேட்டார்,
மனைவியிடம் கொஞ்சம் 
மனம் விட்டு பேச 
அனுமதி வேண்டுமென்று 
அவனும் சொன்னான்.

கணவனுக்கு நாளை 
கழுத்தில் மாலை 
மலர் மாலை அல்ல 
மரணம் தரும் மாலை,
வீட்டில் இருந்து 
விரைந்து சென்றால் 
மரணம் சந்திப்பவனின் 
மனைவி அவள் .

சிறை என்றால்  
சிறிதும் அறியாத 
பிஞ்சு குழந்தையை 
பிடித்திருந்தால் கையில், 
எங்கே செல்கிறோம் 
என்று அது கேட்க,  
வார்த்தைகள் இன்றி 
வாயடைத்து போனால்.

சிந்தனைகள் ஆயிரம் 
சிறை செல்லும் வழியில்,
அழுகை வந்தது 
அவளது விழியில், 
பேசிய வார்த்தைகளெல்லாம் 
மனதில் வந்து செல்ல 
பழகிய நாட்களெல்லாம் 
நினைவில் தோன்றின மெல்ல.

அதிக உரிமை உள்ள 
அன்பு கணவன் அவனிடம் 
அவள் எண்ணங்களை சொல்ல 
அனுமதி ஐந்து நிமிடம்,
சொல்ல நினைத்த 
சொற்கள் எல்லாம் 
சொல்லிட வேண்டுமென
சோகத்தை அடக்கினாள்.

இரும்பு கம்பிகள் 
இருவரையும் பிரிக்க 
உதட்டில் கண்ணீரோ 
உப்பு கரிக்க,
அவன் அவளை பார்க்க 
அவள் அவனை பார்க்க 
அன்பு என்ற கடலில் 
அலை பாய்ந்தன நெஞ்சங்கள்.

உணர்வுகள் எல்லாம் 
உறைந்து போக
மனதில் அனைத்தும்  
மறந்து  போக 
இருவரின் உலகமும் 
இருண்டு போக 
வார்த்தைகள் யாவும் 
வறண்டு போயின. 

வார்த்தைகள் எல்லாம் 
வாயில் இருக்க 
வெளியே வராமல் 
வேதனை தடுக்க,
அவன் உயிர்  நினைத்து  
அவள் உயிர் துடிக்க 
அமைதியில் கரைந்தன 
அந்த ஐந்து நிமிடங்கள்..

  
                                                           -கிஷோர் குமார்


No comments:

Post a Comment